சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக கட்டபட்டு கடலில் இறக்கப்பட்ட 2 சுதேசி DSV ரக கப்பல்கள் !!

நேற்று முன்தினம் அதாவது கடந்த 21ஆம் தேதி புதன்கிழமை அன்று விசாகப்பட்டினம் HSL Hindustan Shipyards Limited ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படைக்கான இரண்டு DSV ரக கப்பல்கள் கடலில் இறக்கப்பட்டன.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு கப்பல்களும் தலா 9,350 டன்கள் எடையும், 118 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டவை, இத்தகைய கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

இவை இந்திய கடற்படையில் உள்ள அனைத்து நாசகாரி, கார்வெட், ஃப்ரிகேட் ரக கப்பல்களை விடவும் பெரிதாகும், இவற்றில் 690V திறன் கொண்ட 5 ஜெனரேட்டர்கள், இரண்டு 5.4MW சக்தியை வெளிபடுத்தும் என்ஜின்கள் இருக்கும் இவற்றால் அதிகபட்சமாக 18 நாட்ஸ் (மணிக்கு 33 கிலோமீட்டர்) வேகத்தில் பயணிக்க முடியும்.

மேலும் இந்த கப்பல்களில் 12 ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கொள்ளளவு கொண்ட Diving அமைப்பு மற்றும் 3 பேருக்கான Bell அமைப்பு ஆகியவை இருக்கும், இவை 300 மீட்டர் ஆழம் வரை செல்லும், DP 2 Positioning அமைப்பும் இருக்கும் கூடுதலாக சுமார் 600 மீட்டர் ஆழம் வரை ஆபரேஷன்களை மேற்கொள்ள உதவும் 15 டன் திறன் கொண்ட கிரேன் ஒன்றும் இருக்கும்.

இந்த வகை கப்பல்களை ஆழ்கடல் நீர்மூழ்கி (Diving) ஆபரேஷன்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக இவற்றில் DSRV Deep Submergence Rescue Vehicle எனப்படும் நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடல் மீட்பு வாகனங்களும் இருக்கும் , இவற்றை பயன்படுத்துவதே இந்த கப்பல்களின் பிரதான பணியாகும்.

இந்த DSV – Diving Support Vessels அதாவது நீர்மூழ்கி உதவி கப்பல்களில் சுமார் 80 அமைப்புகள் உள்நாட்டு தயாரிப்பாகும், கடந்த 2018ஆம் ஆண்டு இந்த கப்பல்களை கட்ட ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்துடன் இந்திய கடற்படை சுமார் 2,392 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்திய கடற்படையில் இந்த கப்பல்கள் முறையே 2023,2024 ஆண்டுகளில் இணையும், இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் அவர்களின் மனைவி கலா ஹரிகுமார் இந்த கப்பல்களுக்கு INS NISTAR நிஸ்தார் மற்றும் INS NIPUN நிபுன் என பெயரிட்டு கடலில் இறக்கினார்.

இதன்மூலம் இந்த DSV ரக கப்பல்களை சொந்தமாக வடிவமைத்து தயாரிக்கும் ஆற்றல் கொண்ட வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு என்றால் மிகையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.