208 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ராக்கெட் என்ஜின் தயாரிப்பு மையம் !!

நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடேட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனமானது சுமார் 208 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ICMF Integrated Cryogenic Engine Manufacturing Facility அதாவது ஒருங்கிணைந்த க்ரையொஜெனிக் என்ஜின் தயாரிப்பு மையம் ஒன்றை நிறுவி உள்ளது.

இந்த மையமானது ISRO Indian Space Research Organization எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிகசிறியது முதல் மிகப்பெரிய அளவிலான அனைத்து வகையான ராக்கெட்டுகளுக்கான என்ஜினையும் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 4500 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த மையத்தில் சுமார் 70 அதிநவீன கருவிகளும் க்ரையொஜெனிக் Cryogenic என்ஜின்களை தயாரித்து சோதனை செய்யும் CE20 சோதனை பகுதி மற்றும் Semi Cryogenic SE2000 சோதனை பகுதிகளை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி திரவுபதி மூர்மு இன்று இந்த மையத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ISRO , HAL நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவுடன் இந்த மையத்தை கட்டமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு 208 கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஏற்கனவே இந்த மையத்தில் உள்ள அனைத்து மின்சார அமைப்புகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் HAL நிறுவனம் தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட HAL நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவானது இதற்கு முன்னர் ISROவின் PSLV, GSLV MK2, GSLV MK3 ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருள் தொட்டிகள் மற்றும் இதர அமைப்புகளை தயாரித்து வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.