எகிப்து நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அலுவல் ரீதியான சுற்றுபயணமாக ஞாயிற்றுக்கிழமை எகிப்து நாட்டிற்கு சென்று சேர்ந்தார், தலைநகர் கெய்ரோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

திங்கட்கிழமை எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபாத்தா அல் சிசி அவர்களை சந்தித்து பேசினார் அப்போது இரண்டு தலைவர்களும் ராணுவ கூட்டு பயிற்சி மற்றும் ராணுவ கூட்டு தயாரிப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்பட உறுதி அளித்து கொண்டனர்.

நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சகாவான எகிப்திய அமைச்சர் ஜெனரல் மொஹம்மது ஸாகி அவர்களை சந்தித்து பேசினார் அப்போது இருவரும் இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

தொடர்ந்து இருவரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர், இது இருதரப்பு ராணுவ உறவுகளில் புதிய அத்தியாயம் என்றால் மிகையல்ல.

இந்தியா மற்றும் எகிப்து இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வந்தது, 1960 முதல் 1984 வரை இந்திய விமானப்படை எகிப்திய போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வந்தது பின்னர் பனிப்போர் காலகட்டத்தில் இருதரப்பு உறவுகள் சற்றே தொய்வடைந்த நிலையில் தற்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் எகிப்து விமானப்படைக்கு சுமார் 70 இலகுரக போர் விமானங்களின் தேவை உள்ளது ஆகவே இந்தியா தனது இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை எகிப்து நாட்டின் விமானப்படைக்கு ஆஃபர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.