அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் SLBM எனப்படும் Submarine Launched Ballistic Missile அதாவது நீர்மூழ்கி கப்பல் ஏவும் பலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும்.
Nuclear Triad எனப்படும் கடல் வான் தரை என மூன்று மார்க்கமாகவும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனுடைய ஒரு பகுதி தான் இந்த SLBM ஏவுகணைகளை சுமக்கும் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களாகும்.

பெரும்பாலும் அனைத்து SLBM ஏவுகணைகளிலும் அணு ஆயுதம் பொருத்தப்பட்டு இருக்கும், அதிலும் இன்றைய SLBM ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டவை ஆகும், மேலும் ஒரே ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை பொருத்த முடியும் இத்தகைய ஒரு ஏவுகணையை கொண்டு ஒரே நாட்டின் பல்வேறு தாக்கி அழிக்க முடியும்.
தென் கொரிய கடற்படையின் டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுதமில்லாமல் வழக்கமான ஆயுதங்களை சுமக்கும் குறைந்த தூரம் பயணிக்கும் SLBM ஏவுகணைகளை சுமப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்மூழ்கி கப்பல்கள் ஏவுகணைகளை ஏவும் போது ஒன்று கடலின் மேற்பரப்பிற்கு வந்து ஏவும் இந்த முறை மிகவும் ஆபத்தானது எதிரி நாட்டு போர் கப்பல்கள் குறிப்பாக விமானங்களின் பார்வையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம், மற்றொன்று கடலுக்குள் இருந்து கொண்டு யாருக்கும் தென்படாமல் ஏவுகணைகளை ஏவும் முறையாகும்.
மேலும் இந்த இரண்டு முறைகளிலும் ஒரு ஏவுகணை அல்லது தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவ முடியும், குறிப்பாக
கடலுக்கு உள்ளேயே இருந்து ஏவுகணைகளை ஏவும் முறையிலும் இரண்டு வெவ்வேறு முறைகள் பின்பற்றி வரப்படுகின்றன, அவையாவன Wet Launch மற்றும் Dry Launch.

Wet Launch என்பது நீர்மூழ்கியில் ஏவுகணை இருக்கும் குழாய்க்குள் முதலில் கடல்நீரை நிரப்பி பின்னர் நேரடியாக ஏவுவது இந்த முறையில் ஏவுகணைகளை ஏவ அதிக நேரமாகும் மேலும் ஏவுகணை குழாயில் நீர் நிரம்புகையில் சப்தம் ஏற்படும் இதனை வைத்து எதிரி நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள், நீர்மூழ்கிகளால் ஏவும் நீர்மூழ்கி கப்பலின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல் நடத்த முடியும், சில கடற்படைகள் கடற்படை நீச்சல் வீரர்களை வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் எதிரி விமானங்கள் தாக்க வந்தால் பதிலடி கொடுக்க மேற்பரப்பில் நிறுத்தி வைத்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dry Launch இந்த முறையில் ஏவுகணைகளை ஏவுகணை குழாயில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேற்றப்படும் அந்த ஏவுகணைகள் கடல் மட்டத்திற்கு மேலே வந்தவுடன் சென்சார் மூலமாக உணர்ந்து உடனடியாக அதின் மோட்டார் மற்றும் என்ஜின்கள் செயல்பாட்டுக்கு வந்து இலக்கை நோக்கி பாய தொடங்கும், இது வேகமாக நடக்கும் அதே நேரத்தில் எதிரிகளின் பார்வையில் ஏவும் நீர்மூழ்கி கப்பல் சிக்காது.
கடலுக்குள் பதுங்கி இருந்து வழக்கமாக 20 – 30 மீட்டர் ஆழத்தில் இருந்து ஏவுகணைகள் ஏவப்படும் மேலும் அதிகபட்சமாக சுமார் 60 மீட்டர் ஆழத்தில் இருந்தும் ஏவ முடியும் இந்த முறையில் மணிக்கு ஏறத்தாழ 6 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.
அதுவே மேற்பரப்பில் இருந்து ஏவும்போது நிலையாக நிற்க வேண்டும் அதுவும் ஆபத்து நிறைந்த ஒன்றாகும் மேலும் துல்லியமாக தாக்குதல் நடத்த வேண்டுமெனில் இலக்கை துல்லியமாக அடையாளம் காட்ட வேண்டும் மேற்பரப்பில் கடல் அமைதியாக இருக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு அலைகள் காரணமாகவும் துல்லியத்தன்மை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணைகளை தொடர்ச்சியாக ஏவும் போது எதிரி நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள் புறப்படும் இடத்தை எளிதாக அடையாளம் கண்டு விடும் உடனடியாக நீர்மூழ்கி கப்பல் மீது எதிரி நாடு தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் மிகவும் அதிகம், தொடர்ச்சியாக அனைத்து ஏவுகணையகளையும் ஏவ எவ்வளவு நேரம் தேவை என்பது பற்றிய தகவல்கள் பொது வெளியில் இல்லை ஆனால் ஒருமுறை சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் சோவியத் கடற்படைக்கு சொந்தமான Hotel ரக நீர்மூழ்கி கப்பல் மூன்று R-13 ரக ஏவுகணைகளை ஏவ 12 நிமிடங்கள் எடுத்து கெண்டதாக கூறப்படுகிறது.
நீர்மூழ்கி கப்பல்கள் Periscope, Test, Working, Estimated, Limited என வெவ்வேறு விதமான ஆழங்களில் இயங்கும், நீர்மூழ்கி கப்பல்களை பொறுத்தவரை ஆழம் என்பது மிகவும் முக்கியமானது எந்தளவுக்கு ஆழம் செல்ல முடியுமோ அந்தளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றால் மிகையாகாது.

Persicope Depth அதாவது பெரிஸ்கோப் எனும் கருவி கொண்டு கடலின் மேற்பரப்பை கண்காணிக்கும் ஆழத்தில் இருந்து தான் வழக்கமாக ஏவுகணைகள் ஏவப்படும் இது சுமார் 18 மீட்டர் ஆகும்,Test Depth என்பது நீர்மூழ்கி கப்பல்கள் அமைதியாக பயணிக்கும் ஆழம் ஆகும், Operating Depth என்பது நீர்மூழ்கி கப்பல்கள் வழக்கமாக இயங்கும் அதிகபட்ச ஆழமாகும் இது ஏறத்தாழ 300 மீட்டர் இருக்கும், Estimated Depth என்பது கப்பல் இவ்வளவு ஆழம் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையில் உள்ள ஆழமாகும்.
Limited Depth என்பது ஒரு நீர்மூழ்கி கப்பல் அதிக ஆழம் செல்லும்போது அதிக நீர் அழுத்தம் காரணமாக நசுங்கி உடையக்கூடிய ஆழமாகும், சில அமெரிக்க மற்றும் ரஷ்ய அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் சுமார் 800 மீட்டர் ஆழம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் உறைபனி இருக்கும் அண்டார்டிகா மற்றும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் கடலுக்கு உள்ளே இருந்து ஏவுகணைகளை ஏவும் போது பனிப்பாறைகள் இல்லாத பகுதியில் இருந்து தான் ஏவுகணைகள் ஏவப்படும் காரணம் பணிப்பாறைகளுக்கு அடியில் இருந்து ஏவும் போது ஏவுகணைகள் பனிப்பாறைகளை மோதி துளைத்து செல்லாமல் மோதியவுடன் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகவே இதனை நீர்மூழ்கி கப்பல்கள் தவிர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.