6ஆம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் சீனா, அமெரிக்கா முதலில் முந்தி கொள்ள வேண்டும் அமெரிக்க விமானப்படை தளபதி !!

அமெரிக்க விமானப்படையின் வான் சண்டை பிரிவின் தலைவரான ஜெனரல் மார்க் கெல்லி சீனா ஆறாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருவதாகவும் ஆனால் அதற்கு முன்னர் அமெரிக்கா முந்தி கொள்ள வேண்டும் எனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க வான்படை மற்றும் விண்வெளி படை கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போது ஜெனரல் மார்க் கெல்லி இதனை தெரிவித்தார் மேலும் அவர் சீனாவில் தற்போது என்ன நிலவுகிறது என்பது பற்றி தெரியாது ஆனால் சரியான பாதையில் அவர்கள் உள்ளதாக கூறினார்.

ஆகவே அமெரிக்கா தனது போட்டியாளர்களை விடவும் முன்னரே இந்த ஆறாம் தலைமுறை போர் விமானத்தை பெற்று விமானப்படையில் இணைத்து களமிறக்க வேண்டியது இன்றியமையாதது எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆறாம் தலைமுறை போர் விமானங்களை பற்றிய தங்களது திட்டங்கள் பற்றி அறிவித்துள்ள நிலையில் சீனா இது பற்றி அதிகமாக வெளிஉலகிற்கு ஒன்றும் பெரிதாக அறிவிக்கவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் Chengdu Aerospace Corporation நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளரான வாங் ஹைஃபெங் 2035 வாக்கில் கடல் மற்றும் வான் பரப்புகளை பாதுகாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை விமானத்தை தயாரிக்கும் பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.