
இந்தியாவின் முதலாவது முப்படை தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து நாட்டின் இரண்டாவது முப்படைகள் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற தரைப்படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்துவிட்டு இந்திய தரைப்படையின் 11 கோர்க்கா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டில் பணியில் இணைந்த அவர் சுமார் 40 ஆண்டுகள் தேச சேவையாற்றி உள்ளார், தனது பணிக்காலத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத ஒழிப்பு ஆபரேஷன்களை வழிநடத்திய அனுபவம் மிக்கவர் ஆவார்.
1981ஆம் ஆண்டு பணியில் இணைந்த அவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்றார் மேஜர் ஜெனரல் பதவி வகித்த போது காஷ்மீரில் பதட்டம் மிகுந்த பாரமுல்லா செக்டாரில் பாகிஸ்தான் உடனான எல்லையோரம் ஒரு காலாட்படை டிவிஷனை வழிநடத்தினார்.
பின்னர் லெஃப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற போது நாட்டின் வடகிழக்கில் ஒரு கோர் படைப்பிரிவை வழிநடத்தினார், பின்னர் 2019 செப்டம்பர் முதல் 2021 மே மாதம் ஒய்வு பெறும் வரையில் சீன எல்லைக்கு பொறுப்பான இந்திய தரைப்படையின் கிழக்கு பிராந்திய தளபதியாக பணியாற்றினார்.
இது தவிர DGMO – Director General of Military Operations அதாவது தரைப்படையின் ஆபரேஷன்களை திட்டமிடும் நடவடிக்கைகள் பிரிவுடைய இயக்குனராகவும் மேலும் பல இதர முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
ஒய்வு பெற்ற பிறகும் கூட பல்வேறு மிக முக்கியமான தேச பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய பொறுப்புகளில் ஒன்றான முப்படை தலைமை தளபதி பொறுப்பை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் இனி ஜெனரலாக அதாவது மூன்று நட்சத்திர அந்தஸ்தில் இருந்து நான்கு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவார் அதன் பின்னர் பொறுப்பேற்று கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
PVSM பரம் விஷிஸ்ட் சேவா மெடல், UYSM உத்தம் யுத் சேவா மெடல், AVSM அதி விஷிஸ்ட் சேவா மெடல், SM சேனா மெடல் மற்றும் VSM விஷிஸ்ட் சேவா மெடல் ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது சிறப்பு தகவலாகும்.