தாலிபான்களுடன் மோதல் 5 பாக் ராணுவ வீரர்கள் மரணம் !!

பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான்கள் அமைப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து பாகிஸ்தான் தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானிய தாலிபான்கள் இந்த மோதலுக்கு ராணுவத்தினர் தான் காரணம் எனவும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தான் பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபற்றி பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள போய்யா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது ஆகவே அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும்,

இதை தொடர்ந்து கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் இந்த சண்டையில் ஒயு அதிகாரி உட்பட ஐந்து ராணுவத்தினரும் நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இரண்டு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெஹ்ரீக் இ தாலிபான்கள் அமைப்பினர் கொலை கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.