1967ல் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட 14 இந்திய அமைதிப்படை வீரர்கள் !!

  • Tamil Defense
  • September 5, 2022
  • Comments Off on 1967ல் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட 14 இந்திய அமைதிப்படை வீரர்கள் !!

1956ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயை நிர்வகித்து வந்த இங்கிலாந்து மற்றும் ஃபிரெஞ்சு கூட்டு நிறுவனமான Suez Canal Company சூயஸ் கால்வாய் நிறுவனத்தை எகிப்திய அதிபர் நாசர் நாட்டுமை ஆக்கினார், இது ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை கோபமுட்டியது.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் சூயஸ் கால்வாய் அமைந்துள்ள எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதி மீது படையெடுத்தது அப்போது இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போர்நிறுத்தம் செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து இரண்டு நாடுகளும் நவம்பர் மாதம் பாராசூட் படையினரை சூயல் கால்வாய் ஒரமாக களமிறக்கின.

எகிப்திய படைகளுடன் சண்டை துவங்கும் முன்னரே இங்கிலாந்து மற்றும் ஃபிரெஞ்சு படைகள் சூயஸ் கால்வாயில் பயணித்த 40 கப்பல்களை தாக்கி மூழ்கடித்து கால்வாயின் போக்குவரத்தை முடக்கின பின்னர் இஸ்ரேலிய படைகளும் கூட்டு சேர்ந்து எகிப்திய படைகளை தாக்கின, பின்னர் தான் மூன்று நாடுகளும் இணைந்து திட்டமிட்டது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து பிரச்சினையை சமாதானமாக தீர்த்து வைக்க அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை UNEF United Nations Emergency Force என்ற படையணியை தோற்றுவித்தது இதில் பிரேசில், கனடா, கொலம்பியா, இந்தியா, டென்மார்க், ஃபின்லாந்து, இந்தோனேசியா, நார்வே , ஸ்வீடன் மற்றும் யூகோஸ்லாவியா ஆகிய நாட்டு படைகள் இருந்தன.

இஸ்ரேல் தான் பிடித்த பகுதிகளிலோ அல்லது தனது எல்லைக்கு உள்ளயோ ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி 1949 காலகட்ட எல்லையை அங்கீகரித்து அதை ஏற்று கொள்ள வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையையும் நிராகரித்த நிலையில்

1956ஆம் ஆண்டு டிசம்பர் எகிப்திய எல்லைக்கு உட்பட்ட சினாயில் களமிறங்கிய இந்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு அமெரிக்கா, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பண மற்றும் இதர உதவிகளை அளித்தன 6000 வீரர்களை கொண்ட இந்த படைக்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையிலான எல்லையை பாதுகாப்பதும் கண்காணிப்பதும் தான் நிர்ணயிக்கப்பட்ட பணியாக இருந்தது.

சினாய், காசா மற்றும் சூயல் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படை தனது பணிகளை மேற்கொண்டு வந்தது, 1956ல் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சு படைகள் எகிப்தில் இருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள்

பின்னர் 1957ல் எகிப்திய படைகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே மோதல் ஏற்படாமல், ஷார்ம் எல் ஷெய்க் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள், பின்னர் 1967 வரை இருநாட்டு எல்லையோரத்தை கண்காணிக்கும் பணிகளை இந்த படை செவ்வனே செய்தது.

இப்படியிருக்க நிதிநிலை மற்றும் இதர காரணங்களால் இந்த படையின் எண்ணிக்கை 6000த்தில் இருந்து 3378ஆக 1967 மே மாதம் வாக்கில் சுருங்கியது, அந்த காலகட்டத்தில் இந்தியா கனடா மற்றும் பிரேசில் படையினர் தான் அதிகளவில் இருந்தனர் மேலும் சினாய்க்கு வெளியே ஒர் சிறு ஸ்வீடன் ராணுவ படையணி இருந்தது.

அப்போது அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் யு தான்ட் மீண்டும் ஒருமுறை ஐக்கிய நாடுகள் படைகளை எல்லையின் இருபுறமும் களமிறக்க முயற்சி செய்த போது இஸ்ரேல் மீண்டும் மறுப்பு தெரிவித்தது, இந்த நிலையில் 1967 மே31 வாக்கில் அனைத்து கனடிய படைகளும் விமானம் மூலமாக எகிப்தை விட்டு வெளியேறின, தொடர்ந்து இந்தியா ஸ்வீடன் பிரேசில் படைகளும் வெளியேற தயாராகி வந்ததன.

1967 ஜூன் மாதம் போருக்கான அறிகுறிகள் தென்பட துவங்கின, அந்த பிராந்தியத்தில் போர் பதட்டம் உச்சகட்ட நிலையை தொட்டது, எகிப்து அதிபர் நாசர் எகிப்திய படைகளை இஸ்ரேல் உடனான எல்லையோரம் குவிக்க உத்தரவிட்டார் பின்னர் ஐக்கிய நாடுகள் படைகளையும் வெளியேற உத்தரவிட்டார்.

ஜூன் 5ஆம் தேதி வாக்கில் காசாவில் உள்ள ஐநா அமைதிப்படை தலைமையகத்தில் இருந்து எகிப்திய விமானப்படை தளங்களை நோக்கி இந்திய பிரேசில் ஸ்வீடன் படையினர் விமானம் மூலமாக வெளியேற வாகனங்களில் பயணிக்க தயாராகி வந்தனர் அப்போது இஸ்ரேலுக்கு எகிப்திய போர் திட்டம் பற்றி தெரிய வந்தது.

உடனடியாக எகிப்திய விமானப்படை தளங்களை முதலில் தாக்க இஸ்ரேலிய விமானப்படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட ஆறு நாள் யுத்தம் இப்படி ஆரம்பமாகியது, அப்போது இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் எகிப்திய தளங்களை தாக்குவதில் மூம்முரமாக இருந்த போது வெளியேறி கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் வாகனங்கள் மீதும் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தின.

இதில் இந்தியாவை சேர்ந்த 14 வீரர்கள் மற்றும் பிரேசிலை சேர்ந்த 1 வீரர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர் அவர்களின் பெயர்களாவன;

கேப்டன் விஜய் சச்சார்
சபேதார் அஜித் சிங்
லான்ஸ் நாயக் சுலகான் சிங்
சிப்பாய் சோஹன் சிங்
சிப்பாய் ஜோஹிந்தர் சிங்
சிப்பாய் ப்ரீத்தம் சிங்
சிப்பாய் சாது சிங்
சிப்பாய் மொஹிந்தர் சிங்
சிப்பாய் முக்தியார் சிங்
சிப்பாய் ஜித் சிங்
சிப்பாய் ஜி கே குட்டி
சிப்பாய் ஸோரா சிங்
NCE சோனா பைத்தா
பேன்ட்ஸ்மேன் கோபால் சிங்

மற்றும் பிரேசில் நாட்டு தரைப்படையை சேர்ந்த சார்ஜென்ட் அடல்பெர்த்தோ இல்ஹா டி மசிடோ ஆகிய 15 அமைதிப்படை வீரர்களும் வீரமரணம் அடைந்தனர், 1967 ஜூன் மாதம் அனைத்து ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வீரர்களும் எகிப்தை விட்டு வெளியேறினர்.

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் முதலில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் இன்று வரை ஐக்கிய நாடுகள் அமைதி படையினர் மீதான தாக்குதல் குறித்த கேள்விகளுக்கான விடை கிடைக்காமலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.