ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உலகின் அதிநவீன கப்பல்களில் இணைக்கும் அமெரிக்கா !!

அமெரிக்க கடற்படையின் கடற்படை கடல் அமைப்புகள் கட்டளையகம் உலகின் அதிநவீன நாசகாரி போர் கப்பல்களான USS ZUMWALT மற்றும் USS MICHAEL MONSOOR ஆகிய இரண்டு கப்பல்களை ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இணைக்க தேர்வு செய்துள்ளது இந்த பணிகளை HII – Huntington Ingalls Industries குழுமத்தின் Ingalls Shipbuilding மேற்கொள்ள உள்ளது.

கேப்டன் மாத்தியூ ஷ்க்ரோடர் பேசும்போது USS ZUMWALT கப்பலின் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறிப்பாக ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இணைக்கும் பணிகள் அக்டோபர் 2023ஆம் ஆண்டு துவங்க உள்ளதாகவும் இதற்காக கப்பல் கட்டுமான தளத்தில் பிரத்யேக கிரேன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிறுவப்பட வேண்டியதாகிறது எனவும் அவர் கூறினார்.

இந்த இரண்டு போர் கப்பல்களிலும் முன்பகுதியில் உள்ள 155 மில்லிமீட்டர் அளவு கொண்ட அதிநவீன பிரங்கி அமைப்பை அகற்றிவிட்டு அந்த இடத்தில் C-HGB ஹைப்பர்சானிக் ஆயுதங்களை செங்குத்தாக ஏவக்கூடிய Vertical Launch System VLS அமைப்பு அமைக்கப்படும் என தெரிகிறது.

மேலும் இந்த கப்பல்களில் மேற்குறிப்பிட்ட AGS – Advanced Gun System எனப்படும் அதிநவீன பிரங்கி அமைப்பிற்கு தேவையான LRLAP Long Range Land Attack Projectile எனப்படும் தொலைதூர நில தாக்குதல் குண்டுகளை வைக்க தேவையான அறைகள் உள்ளன.

தற்போது இந்த பிரங்கி மற்றும் அதற்கான குண்டுகளை வைக்கும் அறைகளை எல்லாம் அகற்றி விட்டு VLS அமைப்பை நிறுவ உள்ளனர், ஆனால் தற்போது எத்தனை ஏவு குழாய்களை பொருத்த உள்ளனர் என்பது தெரியவில்லை இவை அனைத்தும் ஒரே குழாயில் எந்த வகை ஏவுகணையையும் ஏவக்கூடிய MAC Multiple All-round Canisters ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.