இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை கண்காணிக்க சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் மிகப்பெரிய அமெரிக்க ரேடார் !!
1 min read

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை கண்காணிக்க சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் மிகப்பெரிய அமெரிக்க ரேடார் !!

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் LRDR Long Range Discriminating Radar எனும் மிகப்பெரிய ரேடாரை தயாரித்துள்ளது இந்த ரேடார் இன்னும் சில மாதங்களில் படையில் இணையும் என கூறப்படுகிறது.

அமெரிக்க வடக்கு கட்டளையக நடவடிக்கைகள் பிரிவு தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஜொயி லெஸ்டார்டி அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் இந்த ரேடார் இணைக்கப்படும் என தெரிவித்தார் வடகொரிய ஏவுகணைகளை கண்காணிப்பது இதன் முக்கியமான பணியாக இருக்கும்.

கடந்த வருடம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இந்த ரேடாரின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று அலாஸ்கா மாகாணத்தில் உள்ள க்ளீயர் விண்வெளி படை தளத்தில் சோதனைகளுக்காக ஏவுகணை தடுப்பு அமைப்பின் கட்டுபாட்டில் உள்ளதாக அறிவித்தது.

இந்த 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிரமாண்ட ரேடார் சோதனைகளை தற்போது வரை வெற்றிகரமாக கடந்த நிலையில் விரைவில் சோதனை நிறைவு பெற்றதும் அமெரிக்க விண்வெளி படையின் வசம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரேடார் பலிஸ்டிக் ஏவுகணைகள் முதல் ரேடார்களை ஏமாற்றும் போலி அமைப்புகள் வரை துல்லியமாக பிரித்தறியும் தன்மை கொண்டது ஆகையால் போலிகளை அழிக்க விலை மதிப்புமிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி வீண் செய்வது தவிர்க்கப்படும் அதே நேரத்தில் உண்மையான ஏவுகணைகளை மட்டுமே தாக்கி அழிக்கும் என்பது இதன் சிறப்பாகும்.

கால்லியம் நைட்ரைட் Gallium Nitrite (GaN) உலோகத்தால் செய்யப்பட்ட இந்த ரேடார் ஆனது S அலைவரிசையில் இயங்கும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது கூட தனது பணியை செய்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது மேலும் இதனால் விண்வெளி குப்பைகள், செயற்கைகோள்கள் மற்றும் செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணைகளை கூட கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹைப்பர்சானிக் ஆயுதங்களை இந்த ரேடார் எப்படி கையாளும் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் பொது வெளியில் இல்லை, அலாஸ்காவில் இந்த ரேடாரை நிறுவ முடிவு செய்த காரணம் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் குறிப்பாக வடகொரியாவை கண்காணிக்க மிகவும் தோதுவான இடம் என்பதாலேயே ஆகும்.