தைவான் விவகாரம் சீனாவுடன் போர் மூண்டால் அமெரிக்கா 900 போர் விமானங்களை இழக்க நேரிடலாம் !!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக புகழ்பெற்ற CSIS Centre for Strategic Studies and International Studies எனும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் ஆய்வு மையம் ஆகஸ்ட்14 அன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தைவான் மீது சீனா 2026ஆம் ஆண்டு வாக்கில் படையெடுக்கலாம் எனவும் அதை தொடர்ந்து சீனா தைவான் மற்றும் அமெரிக்கா ஆகியவை மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் முடிவில் தைவான் மீது படையெடுப்பதில் சீனா தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்துள்ளது.
அதாவது தைவானை பாதுகாப்பதில் தைவான் மற்றும் அமெரிக்க படைகள் சிறப்பாக செயல்படும் ஆனால் மூன்று தரப்பும் இதில் பலத்த இழப்புகளை சந்திக்கும் தைவானுடைய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் எனவும்
சீனா மற்றும் அமெரிக்க படைகள் பெரிய அளவில் போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் கப்பல்கள் ஆகியவற்றை இழக்கலாம் குறிப்பாக சீன விமானப்படை மற்றும் கடற்படை மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்திக்கும் எனவும் அந்த மையம் கணித்துள்ளது.
மேலும் இந்த போரில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களம் கண்டால் நான்கு வாரங்களில் அமெரிக்கா சுமார் 900 போர் விமானங்கள் வரை இழக்க நேரிடலாம் ஆனால் சீனா தான் மோசமான அழிவை சந்திக்கும் எனவும் சீன கடற்படை நூற்றுக்கணக்கான கப்பல்களை ஒரே படையெடுப்பு ஆபரேஷனில் இழக்க கூடும் என கூறப்படுகிறது.
இதற்கு காரணம் சீன ராணுவ தளவாடங்களை விடவும் அமெரிக்க ஆயுதங்கள் அதிக நவீனத்துவம் வாய்ந்தவை என்பதாகும் இரண்டு தரப்பும் விமானந்தாங்கி கப்பல்களை இழக்கும் என்பதையும் அந்த மையம் கணித்துள்ளது சீனாவிடம் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களை அழிக்க DF17 எனும் பிரத்தியேக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.