ஐக்கிய அரபு அமீரக பயிற்சி அதிகாரிகள் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேற்றம் காரணம் என்ன ??

  • Tamil Defense
  • August 18, 2022
  • Comments Off on ஐக்கிய அரபு அமீரக பயிற்சி அதிகாரிகள் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேற்றம் காரணம் என்ன ??

இங்கிலாந்தின் சான்ட்ஹர்ஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இங்கிலாந்து தரைப்படையின் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ பயிற்சி அதிகாரிகள் 7 பேர் ஒழுங்கீன செயல்களின் ஈடுபட்டதாக பயிற்சி மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

அதாவது பயிற்சியின் போது பயிற்சி நடவடிக்கைகளில் சரிவர ஈடுபடாமல் இருக்கவும் அதனை பயிற்றுவிக்கும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கவும் லஞ்சம் அளிக்க முயன்றதன் அடிப்படையில் 7 ஐக்கிய அரபு பயிற்சி அதிகாரிகளும் பயிற்சி மையத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏழு பேரும் பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கு BMW போன்ற விலை மதிப்புமிக்க வாகனங்கள், ரோலெக்ஸ் கை கடிகாரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுவதற்கான சுற்றுலா ஏற்பாடுகள் போன்றவற்றை லஞ்சமாக அளிக்க முயன்றுள்ளனர், இதன் மூலம் இவர்கள் அனைவரும் அமீரக ஷேக்குகளின் பிள்ளைகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மொஹம்மது பின் ஸாயெத் அல் நயான் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு கொடை அளிக்கும் முக்கிய நபர் ஆவார், சமீபத்தில் கூட அங்கு ஸாயேத் என்ற பெயரில் 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தங்கும் விடுதி ஒன்றை இருநாட்டு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில் கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.