சீனாவின் ராணுவ ரீதியான அச்சுறுத்தலை கண்டித்த தைவான் வெளியுறவு அமைச்சர் !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on சீனாவின் ராணுவ ரீதியான அச்சுறுத்தலை கண்டித்த தைவான் வெளியுறவு அமைச்சர் !!

தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசஃப் வூ திங்கட்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் சீனாவை கண்டு தைவான் அஞ்சவில்லை எனவும் ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தைவான் வருவதை தொடர்ந்து வரவேற்போம் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஊடகமான CNN க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர் மேலும் பேசும்போது சீனா தைவான் எந்த நாட்டுடன் நட்பு பாராட்ட வேண்டும் என தைவானுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது தைவானுக்கு எதிரான சீனாவின் அச்சுறுத்தல் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது என்றாவது ஒரு நாள் சீனா தைவான் மீது போர் தொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் எங்களுக்கு அதை குறித்து பயமில்லை,

சீனாவின் ஆதிக்க மனப்பான்மை தென் சீன கடல் பகுதி, கிழக்கு சீன கடல் பகுதி, ஆஃப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிஃபிக் உள்ளிட்ட பல இடங்களில் வெளிப்படையாகவே தெரிகிறது ஆகவே சீனாவை ஒன்றினைந்து எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும்,

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸியின் தைவான் சுற்றுபயணத்திற்கு பிறகு தைவானை சுற்றி போர் ஒத்திகை நடத்தி அச்சுறுத்த நினைக்கும் சீனாவின் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.