இந்திய ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தும் சூடான் ராணுவம் ??

சமீபத்தில் சூடானை சேர்ந்த ட்விட்டர் கணக்கு ஒன்றில் சூடான் தரைப்படை நடத்திய கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்திய தயாரிப்பு ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பின் மாதிரி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது.

மேலும் அதில் இந்திய தயாரிப்பு ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு சூடான் தரைப்படையால் பயன்படுத்தி வரப்படுவதாக அந்த புகைப்படத்துடன் பதிவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இதுவரை ஆகாஷ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை மேலும் யாருக்கும் தெரியாமல் இத்தகைய மிகவும் முக்கியமான ஆயுத ஏற்றுமதி நடைபெறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.

இந்தியாவின் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு பல நாடுகளுக்கு ஆஃபர் செய்யப்பட்டது ஆனால் இதுவரை யாரும் வாங்க முன்வரவில்லை ஒருவேளை சூடான் படைகளுக்கு ஆகாஷ் அமைப்பு மீது ஆர்வம் இருக்கலாம் அல்லது ரகசியமாக இதனை வாங்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பானது இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றால் பயன்படுத்தி வரப்படுகிறது, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள சுமார் 96 சதவிகித பாகங்கள் இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் தகவல்.

இது தானாகவே 25-30 கிலோமீட்டர் வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கி அழிக்கும் மேலும் அதே நேரத்தில் இதனை இடைமறிக்கும் எதிர மின்னனு போரியல் அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க உதவும் ECCM – Electronic Counter Countermeasures அதாவது மின்னனு போரியல் தடுப்பு அமைப்புகளை தடுக்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும்.

சூடானுடைய ராணுவ படைகள் தற்போது சோவியத் ஒன்றிய தயாரிப்பான SA-2 கைட்லைன் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, 9K33 OSA நடமாடும் வான் பாதுகாப்பு அமைப்புகள், 9K32 Strela -2 போன்ற வீரர்கள் சுமக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் சீனாவின் FB-6A நடமாடும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.