புதிய அதிநவீன நாசகாரி போர்கப்பலை கடலில் அறிமுகப்படுத்திய தென்கொரியா !!

தென்கொரியா தனது முதலாவது KDX 3 Batch 2 ரக AEGIS திறன் கொண்ட அதிநவீன நாசகாரி கப்பல்களில் முதலாவது கப்பலை கடலில் இறக்கியுள்ளது, Jeongjo The Great என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை Hyundai Heavy Industries நிறுவனம் கட்டமைத்து வருகிறது.

தற்போது உல்சான் நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடலில் இறக்கி நிறுத்தி வைக்கப்பட்டு அங்கு இந்த கப்பலுக்கான பெயர் சூட்டுவிழாவும் அந்நாட்டு அதிபர் ,ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தென்கொரியா தனது பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கும் பொருட்டும் ஏற்கனவே உள்ள பிரமாண்ட (7650 டன்கள் எடை) KDX 3 ரகத்தின் கப்பல்களை விட பெரிய நவீனமான கப்பல்களை கட்ட முடிவு செய்தது.

அதன்படி KDX 3 batch2ல மொத்தமாக மூன்று கப்பல்கள் கட்டப்படும் ஒவ்வொரு கப்பலும் 170 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் தலா 8200 டன்கள் எடையும் கொண்டவையாக இருக்கும்.

MH60 Romeo கடல்சார் ஹெலிகாப்டர்களை சுமக்கும் திறன் கொண்ட இவற்றில் Ballistic பலிஸ்டிக் ஏவுகணைகளை கூட கண்காணித்து இடைமறித்து தாக்கி அழிக்க உதவும் அதிநவீன AEGIS சண்டை அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கப்பலில் நீர்மூழ்கிகள் நீரடிகணைகள் ஆகியற்றை நீருக்கடியிலேயே கண்டறிய உதவும் அதிநவீன சோனார் அமைப்பு, வான் தாக்குதல் மற்றும் தரை தாக்குதல் ஏவுகணைகள் ஆகியற்றையும் இவை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டு தென்கொரிய கடற்படையில் இணைய உள்ள இந்த கப்பலும் அதன் சகோதரி கப்பல்களும் முன்பிருந்த கப்பல்கள் அனைத்தையும் விட பன்மடங்கு ஆற்றல் வாயந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.