IAC – 1 Indigenous Aircraft Carrier அதாவது உள்நாட்டு தயாரிப்பு விமானந்தாங்கி கப்பல் என அழைக்கப்படும் INS VIKRANT வருகிற செப்டம்பர் 2ஆம் தேதியன்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட இந்த விமானந்தாங்கி போர் கப்பலானது இந்திய கடற்படையின் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது தற்போது இந்த கப்பல் பற்றிய 6 ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை பார்க்கலாம்.
1) IAC-1 INS VIKRANT போர் கப்பலில் உள்ள கேபிள்களின் ஒட்டுமொத்த நீளம் சுமார் 2,400 கிலோமீட்டர்கள் ஆகும், இது கொச்சியில் இருந்து நாட்டின் தலைநகர் தில்லி வரை செல்லும் தூரத்திற்கு இணையானதாகும்.
2) இந்த IAC – 1 INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை கட்டமைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பின் அளவு அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற Empire State கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பை போல நான்கு மடங்கு அதிகமாகும்.
3) IAC – 1 INS VIKRANT விமானந்தாங்கி போர் கப்பலில் நிலைநிறுத்தப்படும் ஒவ்வொரு Mig29K ரக போர் விமானத்தின் எடையும் ஒரு முழு ஆஃப்ரிக்க யானைக்கு இணையானதாகும் அதாவது 8 டன்கள் எடை கொண்டவையாக அவை இருக்கும்.
4) இந்த விமானந்தாங்கி போர் கப்பலால் ஒரு சிறு நகரத்திற்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் அளவுக்கு சக்தியை உற்பத்தி செய்ய முடியும், அதனை கொண்டு அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்திலும் மிதமான வேகத்தில் 18 நாட்ஸ் வரையிலும் பயணிக்கும், மேலும் 7500 நாட்டிக்கல் மைல்கள் 13890 கிலோமீட்டர் தொலைவு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
5) இந்த விமானந்தாங்கி போர் கப்பலில் பணியாற்றும் 1700 படையினர் தங்கவும் பயன்படுத்தவும் சுமார் 2300 வெவ்வேறு அறைகள் உள்ளன இது தவிர பெண் கடற்படை அதிகாரிகளுக்கான பிரத்தியேக அறைகளும் இக்கப்பலில் உள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும்.
6) தற்போது இந்தியாவிலேயே கட்டப்பட்டு படையில் இணைய உள்ள IAC – 1 கப்பலுக்கு ஏற்கனவே வங்கதேச விடுதலை போரில் சிறப்பாக சேவையாற்றிய விமானந்தாங்கி கப்பலான INS VIKRANT பெயர் தான் சூட்டப்பட்டு உள்ளது.
இனி இந்தியாவிலேயே கட்டப்பட உள்ள அதாவது இந்திய கடற்படை முயற்சி செய்து வரும் IAC -2 எனும் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலுக்கு INS VIRAT என்ற ஏற்கனவே இந்திய கடற்படையில் சேவையாற்றி ஒய்வு பெற்ற விமானந்தாங்கி கப்பலின் பெயர் சூட்டப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.