ரஷ்ய ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து இந்திய ஹெலிகாப்டர்களில் ஆர்வம் காட்டும் ஃபிலிப்பைன்ஸ் !!

ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை ரஷ்யாவில் இருந்து 16 Mi-17 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் அதனை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடலாம் எனும் அச்சத்தின் விளைவாக ஃபிலிப்பைன்ஸ் மேற்கண்ட ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

ஆனால் இதன் காரணமாக ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களின் தேவை மட்டும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல மேற்குலக நாடுகள் தங்களது ஹெலிகாப்டர்களை ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு விற்க முன்வந்தாலும் அவற்றின் விலை மதிப்பு அதிகமாக இருப்பதால் ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் இலகுரக ஹெலிகாப்டரான இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ALH DHRUV மீது ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை ஆர்வம் காட்டி உள்ளது இதற்கு முக்கிய காரணம் அதன் குறைந்த விலை தான்.

மேலும் ஃபிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு படைகளை நகர்த்தவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் பயன்படுத்தவும் ஹெலிகாப்டர்கள் மிகவும் அத்தியாவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.