உலக நிதியத்திடம் நிதி பெற அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் ராணுவ தளபதி !!

  • Tamil Defense
  • August 2, 2022
  • Comments Off on உலக நிதியத்திடம் நிதி பெற அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் ராணுவ தளபதி !!

அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் உலக நிதியத்திடம் IMF கடன் பெற உதவுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா நாடு திவால் ஆகாமல் தடுக்க உலக நிதியம் விரைவில் கடன் தர அமெரிக்கா உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டு கொண்டதற்கு இணங்க தனது அதிகாரத்தையும் அமெரிக்க உறவுகளையும் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவ தளபதி நிதி உதவியை பெற முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் வென்டி ஷெர்மன் அவர்களை ஜெனரல் பாஜ்வா தொடர்பு கொண்டு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரை சந்தித்து உலக நிதியத்திடம் இருந்து நிதி பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி என அனைவரும் இப்படி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுப்பது அந்நாட்டின் நிதி நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.