இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோர்க்கா வீரர்களை படையில் இணைப்பது தொடர்பாக 1947ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து மற்றும் நேபாளம் இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி கோர்க்கா வீரர்களை தங்கள் நாட்டு சக வீரர்களை போல நடத்த வேண்டும் எனவும் ஒய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்களை படையில் சேர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இது நேபாளத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதாவது 4 ஆண்டுகளுக்கு பிறகு நேபாள கோர்க்கா வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் அதன்.பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தெரியாத நிலை ஏற்படும் என பரவலான கருத்து நிலவுகிறது.
சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்கள் இடையே பேசும்போது நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்களை இந்திய தரைப்படைக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைப்பதில் மாற்றமில்லை என தெரிவித்தார்.
ஆனால் நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா இந்திய தூதரை தொடர்பு கொண்டு அக்னிபாத் திட்டத்தின்கீழ் கோர்க்கா வீரர்களை படையில் இணைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்க வேண்டிய ஆட்சேர்ப்பு முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அக்னிபாத் திட்டம் 1947 முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறும் செயலாக கருதப்பட்டு வருகிறது மேலும் நேபாளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒரு நிலைபாட்டை எட்டும் வரை இந்தியா அக்னிபாத் திட்டத்தை நேபாளத்தில் செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதே போல் அடுத்த மாதம் நேபாள நாட்டிற்கு சுற்றுபயணமாக செல்லும் இந்திய தரைப்படையின் தலைமை தளபதி மனோஜ் பாண்டேவிடம் நேபாள ராணுவ தளபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.