நாடு முழுவதும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் வைரவிழா அல்லது அமுத பெருவிழா தின கொண்டாட்டங்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும் கூட பரவலாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களில் பரவலாக பல இடங்களில் நாகா தனி நாடு கொடிகளும் ஏற்றப்பட்டு இருந்தன.
வீடுகள், கடைகள் மற்றும் இதர பல இடங்களில் நாகா தனி நாடு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன, இரண்டு மாநிலத்தை சேர்ந்த நாகா பிரிவினைவாத அமைப்புகளும் அமுத பெருவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து அவர்களை ஆதரிப்பவர்களும் அமுத பெருவிழா கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாகா தனி நாடு பிரிவினைவாத கொடியை தங்களது வீடுகள் கடைகள் போன்ற இடங்களில் ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அமைப்புகள் நாகா சுதந்திர தினம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவதாகவும், அமுத பெருவிழா கொண்டாட்டங்கள் தங்களது உரிமைகள் நம்பிக்கைகளுக்கு எதிரானது எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.