38 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன வீரரின் உடல் கண்டுபிடிப்பு; யார் அவர் என்ன நிகழ்ந்தது ??

  • Tamil Defense
  • August 18, 2022
  • Comments Off on 38 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன வீரரின் உடல் கண்டுபிடிப்பு; யார் அவர் என்ன நிகழ்ந்தது ??

கடந்த 1984ஆம் ஆண்டு இந்திய தரைப்படை இந்திய விமானப்படையின் உதவியோடு சியாச்சின் பனிமலை முகடுகளை கைப்பற்ற ஆபரேஷன் மேக்தூத் எனும் நடவடிக்கையை மேற்கொண்டது, இதன்மூலம் பாகிஸ்தான் முந்துவதற்கு முன்னர் இந்தியா உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினை கைபற்றியது.

இந்த ஆபரேஷனின் ஒரு பகுதியாக சியாச்சினில் உள்ள க்யோங்கலா கிளேசியரில் குமாவோன் ரெஜிமென்ட்டின் 19ஆவது பட்டாலியனை சேர்ந்த 20 வீரர்களை கொண்ட ஒரு படையணி நிலைநிறுத்தப்பட்டு இருந்தது, 1984 மே 29ஆம் தேதி ரோந்து செல்லும் போது ஏற்பட்ட பனிச்சரிவில் அனைவரும் சிக்கி கொண்டனர்.

உடனடியாக அப்போது தரைப்படை மீட்பு பணியில் இறங்கியது ஆனால் 15 வீரர்களின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன, லான்ஸ் நாயக் சந்திரசேகர் ஹர்போலா உள்ளிட்ட ஐந்து வீரர்களின் உடல்கள் மாத்திரம் கடந்த 40 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் தான் இந்திய தரைப்படையின் ரோந்து குழு ஒன்று ரோந்து செல்லும் போது ஒரு ராணுவ வீரரின் உடலை கண்டுபிடித்தது, இதனையடுத்து அவரது உலோக அடையாள பட்டையை சோதித்த போது 1984ஆம் ஆண்டு காணாமல் போன லான்ஸ் நாயக் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து லான்ஸ் நாயக் சந்திரசேகரின் உடல் அங்கிருந்து சியாச்சின் அடிவார ராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வான்வழியாக லடாக் தலைநகர் லே கொண்டு வரப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

புதன்கிழமை அன்று உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அல்மோராவுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அங்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன, இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் ஆறுதல் அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.

அவருடன் இருந்த 4 வீரர்களின் உடல் கிடைக்கவில்லை என்பதும், சந்திரசேகர் 1971 ஆம் ஆண்டு ராணிகேட்டில் குமாவோன் ரெஜிமென்ட்டில் சிப்பாயாக இணைந்தார் அவர் காணாமல் போன போது அவரது மூத்த மகளுக்கு நான்கு வயதும் இரண்டாவது மகளுக்கு ஒன்றரை வயதும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.