உலகின் மிகப்பெரிய அமைதிபடை பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று கொண்ட தமிழர் !!

இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் லெஃப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன், இவர் உலகிலேயே மிகப்பெரிய அமைதி காக்கும் படைப்பிரிவின் படை தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் உள்ள பன்னாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர் வங்கதேச அதிகாரியிடமிருந்து பொறுப்பை பெற்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது தெற்கு சூடான் நாட்டின் அமைதிக்காக பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.

இந்தியா சீனா அமெரிக்கா இங்கிலாந்து உட்பட சுமார் 56 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பணியாற்றி வரும் தெற்கு சூடான் ஐநா அமைதி படை தான் உலகிலேயே மிகப்பெரிய ஐக்கிய நாடுகள் சபை அமைதி படை ஆகும்.

லெஃப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார், இந்திய தரைப்படையின் வான் பாதுகாப்பு படை அதிகாரியான இவர் சுமார் 36 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றிய அனுபவம் வாய்ந்தவர் என்பதும் ஏற்கனவே ஐநா அமைதிப்படையில் சியாரா லியோனில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இந்திய ராணுவ பிரதிநிதியாகவும் இந்திய தரைப்படையில் மலையக ப்ரிகேட், காலாட்படை டிவிஷன், ஒரு தாக்குதல் டிவிஷன் ஆகியவற்றின் கட்டளை அதிகாரி போன்ற முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.