நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDOவின் ASL Advanced Systems Labaratory எனப்படும் ஏவுகணை ஆய்வகம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ளது.
இங்கு ஒட்டுமொத்த இந்திய பாதுகாப்பு துறையையே அதிர்ச்சி அடைய வைத்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது அதாவது IP முகவரி பாதுகாப்பு குறைபாடு சார்ந்த பிரச்சனை தான் அது.
ஒவ்வொரு வீட்டுக்கும் எரு முகவரி இருப்பது போல ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு IMEI எண் இருப்பது போல ஒவ்வொரு கணிணிக்கும் ஒரு பிரத்தியேக எண் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட முகவரி இருக்கும் இதனை IP address – Internet Protocol Address என அழைப்பர்.
மேற்குறிப்பிட்ட ஆய்வகம் ஏவுகணைக்கான பாகங்கள் வாங்குவது தொடர்பாக அந்த ஆய்வகத்தில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க கணிணி ஒன்றில் இருந்து டெண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது ஒரு நிறுவனம் அதற்கு பதில் அளித்துள்ளது ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரண்டும் ஒரே IP முகவரியை கொண்டுள்ளன அதாவது ஒரே கணிணியில் இருந்து நடைபெற்றுள்ளது.
ASL ஆய்வகம் நாட்டின் முப்படைகளுக்கும் தேவையான அதிநவீன ஏவுகணைகளுக்கான மிக முக்கியமான பாகங்களை தயாரித்து கொடுக்கும் அமைப்பாகும், குறிப்பாக அணு ஆயுத பலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பாகங்களையும் தயாரித்து கொடுக்கும் அமைப்பாகும்.
இது நாட்டின் மிகவும் பாதுகாப்பு மிக்க இடங்களில் ஒன்றாகும் இங்கு பலகட்ட சோதனைகள் நடைபெற்ற பின்னர் தான் வெளி நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர், இந்த ஆய்வகத்தின் கணிணிகள் பாதுகாப்புமிக்க வெளி உலகுடன் தொடர்பில்லாத இணைய சேவையில் Intranet இயங்குபவை ஆகும்.
ஆகவே இந்த Intranet அமைப்புக்குள்ளேயே நுழைய முடியும் என்றால் அந்த கணிணிகளில் உள்ள மிகவும் முக்கியமான தகவல்களை கூட இந்த செயல்களை செய்தவர்களால் பெற முடியும் என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார் மேலும் அவர் இது ஊழல் தொடர்பான பாதுகாப்பு குறைபாடு என்றார்.
DRDO வெளியிட்டுள்ள துறை ரீதியான நோட்டீஸ் ஒன்றில் ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இது போன்ற சுமார் 895 சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும் தற்போது அவையனைத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட சம்பவம் அதிகாரி மட்டத்தில் நடைபெற்று உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் DRDO செய்தி தொடர்பாளர் இது குறித்து பேச மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.