15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் அமெரிக்க விமானப்படையின் குண்டுகளை விமானங்களில் பொருத்தும் படைக்குழுவினர் தவறுதலாக ஆறு அணு ஆயுதங்களை ஒரு குண்டுவீச்சு போர் விமானத்தில் இணைத்த சம்பவம் குறித்த கதை தான் இது, அதை பற்றி பார்க்கலாம்.
அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மினாட் விமானப்படை தளத்தில் ஒரு Boeing B-52H Stratofortress தொலைதூர குண்டுவீச்சு போர் விமானத்தில் தலா ஒர் W80-1 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆறு அதிநவீன க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டன.
ஒவ்வொரு ஏவுகணையும் 5 முதல் 150 கிலோடன்கள் வரையிலான வெடிக்கும் ஆற்றலை கொண்டவை ஆகும், ஒரு கிலோடன்கள் என்றால் சுமார் 1000 டன்கள் அளவிலான TNT ஒன்றாக வெடிக்கும் ஆற்றல் ஆகும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி வீசப்பட்ட அணுகுண்டுகள் நகரங்களில் முறையே 13 மற்றும் 21 கிலோடன்கள் வெடிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட தொலைதூர குண்டுவீச்சு போர் விமானம் எவ்வித பாதுகாப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன, பின்னர் மறுநாள் காலை மினாட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தில் மூன்று மணி நேரம் கழித்து தரை இறங்கியது பின்னர் ஆயுதங்கள் அகற்றும் பணி துவங்கியது.
அப்போது தான் வெடிகுண்டு பொருத்தும் அகற்றும் குழுவில் ஒருவர் ஏதோ தவறு நடந்து இருப்பதை கண்டு பிடித்தார், 36 மணி நேரம் கழித்து தான் இந்த விமானத்தில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மினாட் விமானப்படை தளத்தில் உள்ள பங்கரில் இருந்து அணு ஆயுதங்கள் எடுக்கப்பட்டதையும் போர் விமானத்தில் பொருத்தப்பட்டதையும் யாரும் கவனிக்கவில்லை இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சுட்டி காட்டி கவனக்குறைவாக படையினர் செயல்படுவதையும் உறுதிப்படுத்தியது.
இதன் காரணமாக உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு முடிவில் 7 மூத்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கபட்ட பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர், மேலும் 65 வீரர்கள் அணு ஆயுதங்களை கையாளும் திறன் சார்ந்த சான்றிதழ்களை பெறும் வாய்ப்புகளை இழந்தனர் இது தவிர அமெரிக்க விமானப்படை செயலாளர் மற்றும் தளபதி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் RB-52 52-0005 எனும் சீரியல் எண் கொண்ட மேற்குறிப்பிட்ட அதே B-52H தொலைதூர குண்டுவீச்சு விமானத்தின் புகைப்படம் என்பதும் இந்த விமானம் தற்போது Rockies Air & Space அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.