நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research & Development Organisation “Project VEDA” ப்ராஜெக்ட் வேதா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, VEDA – Vehicle for Defence Application என்பது தான் இதன் விரிவாக்கம் ஆகும்.
அதாவது ராணுவத்திற்கான செயற்கைகோள்களை இனி ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட்டுகளை கொண்டு மூலமாக ஏவாமல் நேரடியாக DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமே ஏவ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு ஏவும் வகையில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட K4 SLBM நீர்மூழ்கியால் ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த வேதா திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
K4 SLBM ஏவுகணையின் முதலாவது மற்றும் இரண்டாவது நிலைகளை இதற்கு பயன்படுத்தி ராணுவ செயற்கைகோள்களை Lower Orbit அதாவது பூமிக்கு அருகே விண்ணில் நிலைநிறுத்த முடியும் என கூறப்படுகிறது அடுத்த சில மாதங்களில் இது செயல்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேதா திட்டத்திற்கு தலைமை வகிக்கும் மூத்த விஞ்ஞானி முனைவர் கிஷோர் நாத் பேசும்போது விண்வெளி ஆய்வு நிறுவனங்களை இந்த பணிகளில் இருந்து பிரித்து மேலும் சிறப்பாக செயல்படுவதே வேதா திட்டத்தின் பிரதான நோக்கம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வேதா திட்டத்தின் ராக்கெட்டுகளை ISRO இஸ்ரோவின் ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளதா அல்லது ஒடிசாவில் உள்ள DRDO வின் ஒருங்கிணைந்த சோதனை ஏவு தளத்தை பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதா என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.