
கடந்த ஜூன் மாதம் இந்திய தரைப்படை தனது முதலாவது LCH படையணியை பெங்களூர் நகரில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, இந்த படையணிக்கு 15 LCH ஹெலிகாப்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டன.
தற்போது இவற்றில் 9 LCH (Light Combat Helicopter) இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 6 ஹெலிகாப்டர்களின் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டில் மீதமுள்ள 6 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களின் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்து படையில் இணைக்கப்படும் இதற்கடுத்து மேற்குறிப்பிட்ட படையணி இந்திய சீன எல்லையோர பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என இந்திய தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தரைப்படை தலா 10 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொண்ட 7 புதிய படையணிகளை உருவாக்கி மலைபிரதேச பகுதிகளில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் இந்திய தரைப்படை 95 LCH இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 115 LUH இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்கவும், இந்திய விமானப்படை சில மாதங்களில் தனது முதலாவது LCH படையணியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.