பாங்காங் ஸோ ஏரிக்கு குறுக்கே சீன ராணுவம் கனரக தளவாடங்களை கூட நகர்த்தும் வகையிலான ஒரு பாலத்தை கட்டமைத்து உள்ளது, இந்த பாலம் விரைவில் சீன படைகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்திய தரைப்படை இந்த பாலத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது, அதன்படி தற்போது சில விஷயங்களை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இந்திய தரைப்படை ஆறு வீரர்கள் போக்குவரத்து படகுகள் மற்றும் பன்னிரண்டு புதிய அதிவேக ரோந்து படகுகளை பாங்காங் ஸோ ஏரியில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுமார் 35 வீரர்களை சுமக்கும் திறன் கொண்ட காலாட்படை போக்குவரத்து படகுகள் கோவாவில் உள்ள Aquarius Shipyards நிறுனத்தால் கட்டப்பட்டவை ஆகும் மேலும் இவற்றை இந்திய தரைப்படையின் பொறியாளர்கள் படையணி இயக்கி வருகிறது, இதே போன்ற படகுகளை பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள சர் க்ரீக் பகுதியிலும் களமிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் சுமார் தலா 30 வீரர்களை சுமக்க கூடிய அதிவேக ரோந்து படகுகளையும் களமிறக்கி உள்ளது இந்த படகுகளை கோவா கப்பல் கட்டுமான தளம் கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது.