76 உள்நாட்டு தயாரிப்பு சண்டை ட்ரோன்களை வாங்கும் இந்திய படைகள் !!

இந்தியாவின் முப்படைகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சுமார் 76 ஆயுதம் தாங்கிய TAPAS “தபாஸ்” ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2023ஆம் ஆண்டு வாக்கில் முதல்கட்ட டெலிவரியை HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிகஸ் லிமிடெட் நிறுவனம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

TAPAS BH-201 எனப்படும் இந்த UCAV ரக ட்ரோன் அமெரிக்காவின் MQ-9 PREDATOR தாக்குதல் ட்ரோன்களை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்படுபவை ஆகும், முதல்கட்டமாக 6 ட்ரோன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

HAL ஹிந்துஸ்தான் ஏரோநாடிகஸ் லிமிடெட் மற்றும் DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவை கூட்டாக இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன என்பது சிறப்புமிக்க தகவல் ஆகும்.

DRDO தலைவர் சதீஷ் ரெட்டி கூறும்போது ஏற்கனவே தபாஸ் 28,000 அடி உயரம் வரை செல்லவும் சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் ஆற்றலை கொண்டுள்ள நிலையில் தற்போது சுமார் 30,000 அடி உயரம் வரை செல்லவும் 24 மணிநேரம் வரை பறக்க வைக்கவும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்த தபாஸ் TAPAS BH-201 UCAV ஆளில்லா தாக்குதல் விமானத்தால் இரவு மற்றும் பகலிலும் இயங்க முடியும், 350 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமக்க முடியும், சுமை ஏதுமின்றி சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்க முடியும்,

இந்தியாவின் முதலாவது MALE – Medium Altitude Long Endurance அதாவது நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஆளில்லா விமானத்தால் உளவு, கண்காணிப்பு, தாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

76 TAPAS BH-201 MALE UCAV வானூர்திகளில் 60 இந்திய தரைப்படைக்கும், 12 இந்திய விமானப்படைக்கும், 4 இந்திய கடற்படைக்கும் ஒப்படைக்கப்பட உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.