2035ஆம் ஆண்டில் கூட 42 படையணிகளை இந்திய விமானப்படை கொண்டிருக்காது காரணம் என்ன ??

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on 2035ஆம் ஆண்டில் கூட 42 படையணிகளை இந்திய விமானப்படை கொண்டிருக்காது காரணம் என்ன ??

சற்று நாட்கள் முன்னர் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகளே தேசிய ஊடகங்களில் இந்திய விமானப்படை 42 படையணிகளை 2035ஆம் ஆண்டில் கூட கொண்டிருக்காது என பகிரங்கமாக ஒப்பு கொண்டனர்.

இது பரவலாக கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் இந்த செய்தி மிகப்பெரிய அபாயத்தை சுட்டி காட்டுகிறது என்றால் மிகையல்ல அதிலும் குறிப்பாக இந்தியா சீனா பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை முனை போருக்கு தயாராகி வருவது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்திய விமானப்படையின் அங்கீகரிக்கப்பட்ட படை பலமான 42 படையணி எனும் எண்ணிக்கையில் அடுத்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்திய விமானப்படை தற்போதுள்ள 32 படையணிகளில் இருந்து கூடுதலாக 3 படையணிகளை மட்டுமே பெறும் என கூறப்படுகிறது.

2035 ஆம் ஆண்டில் 35 படையடிகள் பலத்தை பெற வேண்டுமானால் கூட இந்திய விமானப்படை சுமார் 83 தேஜாஸ் மார்க்-1ஏ Tejas Mk1A, 114 பல திறன் போர் விமானங்கள் MRFA, 106 தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2, குறைந்தபட்சம் 40 ஐந்தாம் தலைமுறை ஆம்கா AMCA என 300க்கும் அதிகமான விமானங்களை இணைக்க வேண்டும்.

ஆனால் இதில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் மேலும் 4 முதல் 5 படையணிகள் வரை பலம் குறையும் அதாவது 200க்கும் அதிகமான போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்காது, ஆனால் இதை எந்த அளவுக்கு அரசும் விமானப்படையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளனர் என்பது அச்சத்தை அளிப்பதாக உள்ளது.

காரணம் சீனா சுமார் 90 4.5ஆம் தலைமுறை மற்றும் 5ஆம் தலைமுறை போர் விமானங்களை படையில் இணைக்க உள்ளது, ஏற்கனவே 2 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் உள்ள நிலையில் கடற்படைக்காக 3ஆவதாக ஒர் ஐந்தாம் தலைமுறை விமானத்தை தயாரிக்க உள்ளது.

மேலும் 2035ஆம் ஆண்டு வாக்கில் சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையில் உள்ள போர் விமானங்களில் 90% 4.5 மற்றும் 5ஆம் தலைமுறையை சேர்ந்தவையாக இருக்கும் 6ஆம் தலைமுறை விமானம் கூட அப்போது படையில் இணைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20க்கும் அதிகமான 4.5ஆம் தலைமுறையை சேர்ந்த JF-17 போர் விமானங்களை படையில் இணைத்து வருகிறது, மேலும் சமீபத்தில் J-10CE ரக போர் விமானமும் படையில் இணைந்தது, இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாக் விமானப்படைக்கு குறைந்த கால அளவில் சீனாவால் பல போர் விமானங்களை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பது இந்திய விமானப்படையில் போர் விமானங்களை வேகமாக இணைப்பதை சார்ந்து உள்ளது எனலாம் மேலும் உடனடியாக 114 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.