ஆஃப்கன் மீட்பு பணிகள் சிறப்பாக செயல்பட்ட விமானப்படை விமானியின் முன்னர் வெளிவராத கதை !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on ஆஃப்கன் மீட்பு பணிகள் சிறப்பாக செயல்பட்ட விமானப்படை விமானியின் முன்னர் வெளிவராத கதை !!

இந்திய விமானப்படையின் ஸ்கைலார்ட்ஸ் படையணி Boeing C17 ரக போக்குவரத்து விமானங்களை இயக்கி வருகிறது, இந்த படையணியை சேர்ந்த அதிகாரி தான் க்ரூப் கேப்டன் ராகுல் சிங்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மூன்று C17 போக்குவரத்து விமானங்கள் ஆபரேஷன் தேவி ஷக்தியின் ஒரு பகுதியாக ஆஃகானிஸ்தான் தலைநகர் காபூல் சென்று இந்தியர்களை மீட்க அனுப்பி வைக்கப்பட்டன, இந்த நடவடிக்கையின் கமாண்டராக க்ரூப் கேப்டன் ராகுல் சிங் நியமிக்கப்பட்டார்.

மனிதர்கள் சுமக்கக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள், சிறிய ரக ஆயுதங்களின் அபாயம், தொலைதொடர்பு மற்றும் வழிகாட்டி அமைப்புகளின் இருட்டடிப்பு போன்ற பல சிக்கல்கள் இருந்த நிலையில் அவற்றை சமாளித்து ஆபரேஷனை நடத்த வேண்டி இருந்தது.

இப்படி அனைத்தையும் தாண்டி C17 விமானம் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று சுமார் நான்கு மணி நேரம் இந்தியர்கள் வரும் வரை காத்திருந்தது, அப்போது விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் மக்கள் கூட்டம் ஊடுருவியது போதாக்குறைக்கு துப்பாக்கி சூடு வேறு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உடனடியாக விமானத்தை இயக்கிய க்ரூப் கேப்டன் ராகுல் சிங் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரை நோக்கி விமானத்தை செலுத்தினார், அங்கிருந்து அவர் இந்திய விமானப்படை தலைமையகத்தில் உள்ள நடவடிக்கைகள் பிரிவுடனும் துஷான்பே இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரியுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார்.

இப்படி மீண்டும் இரண்டாவது முறை காபூலில் தரை இறங்க திட்டமிடப்பட்டது ஆனால் காபூலில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் காபூல் விமான நிலையத்தின் கட்டுபாட்டு அறை மற்றும் ரேடார் சேவைகள் கிடைக்கபெறாத காரணத்தால் விமானம் வானிலேயே சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து சமயோஜிதமாக செயல்பட்ட க்ரூப் கேப்டன் ராகுல் சிங் உடனடியாக அமெரிக்க விமானப்படையை தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டார் மேலும் காபூலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரியுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் ஒருவழியாக விமானம் தரை இறங்க அனுமதி கிடைத்தது.

இரவில் பார்க்கும் கருவி உதவியுடன் விமானம் தரை இறங்கியதும் உடனடியாக அங்கிருந்த அமெரிக்க தரைப்படை கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டார் பின்னர் விமானத்தில் இருந்த கருட் கமாண்டோ சிறப்பு படை வீரர்களை விமானத்தை சுற்றி நிலை கொண்டு காவல் காக்க உத்தரவு பிறப்பித்தார்.

பல மணி நேரம் கழித்து சுமார் 153 இந்தியர்களுடன் எவ்வித சிக்கலுமின்றி இந்திய C17 விமானம் காபூலில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்டது இப்படி சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் க்ரூப் கேப்டன் ராகுல் சிங்கிற்கு சுதந்திர தினத்தன்று வாயு சேனா வீர தீர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.