ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாக்லோவில் உள்ள இந்திய தரைப்படையின் சிறப்பு படைகள் பயிற்சி பள்ளியில் வஜ்ரா பிரஹார் என்ற பெயரிலான 21 நாட்கள் கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதில் அமெரிக்க தரைப்படையின் 1st SFG Special Forces Group 1ஆவது சிறப்பு படைகள் குழு மற்றும் இந்திய தரைப்படை சார்பில் SFTS சிறப்பு படைகள் பயிற்சி பள்ளியின் சிறப்பு படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இங்கிருந்து சீன எல்லை வெறுமனே நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த பயிற்சி அறிவிக்கப்பட்ட உடனேயே சீனாவிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வரும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தற்போது நடந்தேறி உள்ளது.
அதாவது சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடக சந்திப்பில் பேசிய கர்னல் டான் கிஃபெய் இந்தியா சீனா இடையேயான எல்லையோர பிரச்சினையில் எந்த மூன்றாவது நாடும் மூக்கை நுழைப்பது சரியல்ல என பொடி வைத்து பேசியுள்ளார்.
மேலும் அவர் எந்தவொரு இருதரப்பு அல்லது பன்னாட்டு ராணுவ கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் மற்றொரு நாட்டை குறிவைத்து நடத்தப்படுவது சரியல்ல எனவும் அது பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் எனவும் அவர் கூறினார்.
இதனை அவர் தற்போது நடைபெற்று வரும் வஜ்ரா பிரஹார் பயிற்சிகள் குறித்த சீன அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏற்கனவே சீனா கோபத்தில் கொந்தளிக்கும் நிலையில் அதற்கு உரம் போடும் விதமாக வருகிற அக்டோபர் மாதம் உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் இந்திய அமெரிக்கா இடையேயான “யுத் அப்யாஸ்” Yudh Abhyas கூட்டு பயிற்சிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.