கொலம்பியா விமானப்படைக்கு தேஜாஸ் போர் விமானம் ??
1 min read

கொலம்பியா விமானப்படைக்கு தேஜாஸ் போர் விமானம் ??

கொலம்பிய விமானப்படை இந்த ஆண்டிற்குள் தன்னிடம் உள்ள இஸ்ரேலிய தயாரிப்பு IAI Kfir க்ஃபீர் இலகுரக போர் விமானங்களின் படை விலக்க நடவடிக்கைகளை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு இஸ்ரேலிய விமானப்படை பயன்படுத்தி வந்த 24 க்ஃபீர் போர் விமானங்களை கொலம்பியா வாங்கியது அப்போது முதல் அவை கொலம்பிய விமானப்படையின் முதுகெலும்பாக திகழ்கின்றன.

இந்த நிலையில் 1989 முதல் இன்று வரை இரண்டு நாட்டு விமானப்படைகளிலும் இவற்றின் மொத்த சேவைக்காலம் சுமார் 30 வருடங்களை கடந்து விட்டது மேலும் கொலம்பிய விமானப்படையின் இரண்டு க்ஃபீர் போர் விமானங்கள் விபத்தில் சிக்கி அழிந்துள்ளன.

ஆகவே கடந்த சில ஆண்டுகளாக கொலம்பியா அரசு தனது நாட்டு விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பதினைந்து அதிநவீன போர் விமானங்களை வாங்க விரும்பி திட்டமிட்டு வருகிறது.

இஸ்ரேல் தன்னிடம் உள்ள தேவைக்கு அதிகமான F-16 போர் விமானங்களை கொலம்பியா விமானப்படைக்கு விற்க முன்வந்துள்ளது, அதே நேரத்தில் ஜனவரி மாதம் வெளியான ஒரு தகவலின்படி கொலம்பியா விமானப்படை நெதர்லாந்து விமானப்படையின் F-16 போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்தது.

இப்படியிருக்க அமெரிக்கா தனது F-16 Block 70, ஸ்பெயின் தனது யூரோஃபைட்டர் டைஃபூன் Eurofighter Typhoon, ஸ்வீடன் தனது சாப் க்ரைப்பன் SAAB Grippen ஆகிய போர் விமானங்களை விற்க முன்வந்த நிலையில் இந்தியாவும் தனது HAL LCA Tejas MK1A இலகுரக போர் விமானத்தை விற்க முன்வந்துள்ளது.

ஆனால் கொலம்பியாவின் நிதிநிலை அதிநவீன போர் விமானங்களை வாங்கும் அளவுக்கு சிறப்பான நிலையில் இல்லை ஆகவே கொலம்பியா போர் விமானங்கள் வாங்கும் திட்டத்தை கைவிடலாம் அல்லது மலிவான போர் விமானத்தை தேர்வு செய்யலாம் எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.