இந்தியாவின் புதிய VLSRSAM வான் பாதுகாப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

செவ்வாய்கிழமை அன்று ஒடிசா மாநிலம் சன்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து VLSRSAM Vertically Launched Short Range Surface to Air Missile அதாவது செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் DRDO Defence Research & Development Organisation இந்த VLSRSAM ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

இந்திய கடற்படைக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த VLSRSAM ஏவுகணையானது இந்திய கடற்படையின் பலத்தை மற்றொரு நிலைக்கு உயர்த்தும் என்றால் மிகையாகாது, இந்த ஏவுகணை கடலின் மேல்பரப்பை ஒட்டி பறந்து வரும் இலக்குகளையும் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார், மேலும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களும் இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.