ஏற்றுமதி சந்தையை குறிவைத்து பிரம்மாஸ் ஏவுகணை கலன்களை உருவாக்கும் இந்தியா ரஷ்யா !!
ரஷ்யாவில் நடைபெற்று வரும் ARMY – 2022 ராணுவ கண்காட்சியில் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து ஏற்றுமதி சந்தையை குறிவைத்து ஒரு பிரத்தியேக ஏவுகணை படகை வடிவமைத்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சுமார் 800 டன்கள் எடை கொண்ட ஏவுகணை படகில் 8 பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஒரு சிறிய வடிவமும் 12 பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சற்றே பெரிய ஏவுகணை படகும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறிய நாடுகளின் கடற்படைகளுக்கு இத்தகைய ஏவுகணை படகுகளை விற்க முடியும் மேலும் இவற்றில் உள்ள 290 கிலோமீட்டர் தொலைவு பாயும் பிரம்மாஸ் ஏவுகணைகள் மூலமாக பெரிய கடற்படைகளுக்கு கூட சவால் விடுக்க முடியும் என்பது சிறப்பாகும்.
இத்தகைய ரோந்து படகுகள் சீனா போன்ற வலிமையான பெரிய நாடுகளின் அச்சுறுத்தலை சந்திக்கும் தைவான், ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற சிறிய நாடுகளின் கடற்படைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆக அமையும் என்றால் மிகையல்ல, 2009ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற MAKS ராணுவ கண்காட்சியில் இந்த படகின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.