முதல்முறையாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்படை அனைத்து பெண்கள் குழு !!
இந்திய கடற்படையின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து பெண்கள் குழு ஒன்று விமானம் மூலமான ரோந்து நடவடிக்கை ஒன்றில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்படையின் INAS – 314 எனும் வான் படையணியை சேர்ந்த ஐந்து பெண் அதிகாரிகள் குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வடக்கு அரபி கடல் பகுதியில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரோந்து பணியை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் கட்டளை அதிகாரியாக லெஃப்டினன்ட் கமாண்டர் ஆஞ்சல் ஷர்மா, விமானிகளாக லெஃப்டினன்ட் ஷிவாங்கி மற்றும் லெஃப்டினன்ட் அபூர்வா கீதே, சென்சார் அதிகாரிகளாக லெஃப்டினன்ட் பூஜா பான்டா மற்றும் சப் லெஃப்டினன்ட் பூஜா ஷெகாவத் ஆகியோர் இருந்தனர்.
இந்த ஐந்து அதிகாரிகளும் டோர்னியர்-228 Dornier-228 ரக கடல்சார் கண்காணிப்பு விமானத்தில் பறந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இந்திய கடற்படை வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளனர் என்றால் மிகையல்ல.