கடந்த 10ஆம் தேதி ஃபிரெஞ்சு விமானப்படையை சேர்ந்த மூன்று ரஃபேல் போர் விமானங்கள் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்துள்ளன.
இந்த விமானங்கள் ஃபிரான்ஸ் நாட்டின் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கான படை நிறுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், ஆகவே போகும் வழியில் எரிபொருள் நிரப்பி கொள்ள சூலூர் தளத்திற்கு அவை வந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபிரெஞ்சு விமானப்படை Pegase 22 பெகாஸெ-22 என்ற பெயரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொலைதூர நடவடிக்கையை மேற்கொள்கிறது, இதன்படி 72 மணி நேரத்திற்குள் ஃபிரான்ஸில் இருந்து பசிஃபிக் பிராந்தியத்தை அடைவது இலக்காகும்.
இந்த 16,000 கிலோமீட்டர் பயண திட்டத்தில் 3 ரஃபேல் போர் விமானங்களும் உதவி விமானங்களும் சூலூர் தளம் வந்து எரிபொருள் நிரப்பிவிட்டு வியாழன் அன்று தென் பசிஃபிக் பகுதியில் ஆஸ்திரேலியா அருகேயுள்ள ஃபிரான்ஸ் தீவான நியூ காலிடோனியாவை நோக்கி அவை சென்றன.
பின்னர் அங்கிருந்து இந்த பெகாஸெ-22 நடவடிக்கையின் இறுதிகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளன அங்கு PITCH BLACK பன்னாட்டு பயிற்சியில் கலந்து கொள்கின்றன இதில் இந்திய விமானப்படையும் கலந்து கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு பற்றி இந்தியாவுக்கான ஃபிரெஞ்சு தூதர் எம்மானுவேல் லெனாய்ன் கூறும்போது இந்திய ஃபிரெஞ்சு விமானப்படைகளின் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை காட்டுவதாகவும்
ஆசியாவில் ஃபிரான்ஸ் நாட்டின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுடன் இணைந்து இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியில் ஃபிரெஞ்சு விமானப்படை செயல்பட்டது இயற்கையான ஒன்றாகும் என்றார்.