ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 வீரர்கள் வீரமரணம் !!

  • Tamil Defense
  • August 12, 2022
  • Comments Off on ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 வீரர்கள் வீரமரணம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தினுடைய தர்ஹால் எனும் பகுதியின் பர்கால் எனும் இடத்தில் இந்திய தரைப்படையின் முகாம் ஒன்று அமைந்துள்ளது.

நேற்று இந்த முகாமின் வேலியை அறுத்து பயங்கரவாதிகள் கடந்து உரி பாணியில் தாக்குதல் நடத்த முயன்றனர் அப்போது காவல் பணியில் இருந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை கண்டு உடனடியாக தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் பின்னர் வீரமரணம் அடைந்தார் அவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை அதிகாரி சுபேதார் ராஜேந்திர பிரசாத், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ரைஃபிள்மேன் மனோஜ் குமார்,

தமிழ்நாட்டின் மதுரை மாவடத்தை சேர்ந்த ரைஃபிள்மேன் லஷ்மணன் மற்றும் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த நிஷாந்த் மாலிக் ஆகியோர் ஆவர் இவர்கள் அனைவரும் ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் அவர்களிடம் இருந்து 2 ஏகே-47 துப்பாக்கிகள், கவசங்களை துளைக்கும் தீப்பற்ற வைக்கும் திறன் கொண்ட 300 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள் ஆகியவை கைபற்றப்பட்டன.

வீரமரணம் அடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.