சீனா தற்போது நீரில் மூழ்கி பயணிக்கவும் வானில் மேலேழும்பி பறக்கவும் கூடிய ஒரு அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்து உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கிழக்கு சீனாவில் அமைந்துள்ள விமானவியல் மற்றும் வானியல் நான்ஜிங் பல்கலைக்கழக ஆய்வு குழு ஒன்று மேற்குறிப்பிட்ட பறக்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் மாதிரியை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் SCMP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பறக்கும் நீர்மூழ்கி கப்பல்களை பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடு ஆகியவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ள முடியும், ஆனால் பெரும்பாலும் ராணுவம் சார்ந்த உபயோகத்திற்கு தான் இது பயன்படுத்தப்படும் என்றால் அது மிகையல்ல.
இந்த பறக்கும் நீர்மூழ்கி கப்பல் நேரடியாக நீருக்கடியில் இருந்து வெளிவந்து வானில் பறக்காது மாறாக இது நீரில் இருந்து வெளிவந்து சற்று நேரம் கடலின் மேற்பரப்பில் வேகமாக மிதந்து சென்று தான பறக்க துவங்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவும் இத்தகைய பறக்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க முயன்றுள்ளது ஆனால் சீனாவை போன்று கப்பல் எதிர்ப்பு பணிக்கு பயன்படுத்தாமல் மாறாக சிறப்பு படைகள் பயன்பாட்டிற்கென அவற்றை உருவாக்கி விரும்பியது கூடுதல் தகவல் ஆகும்.