முன்னாள் இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் ஜே ஜே சிங் சமீபத்தில் வெளியான அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ கட்டுமான பணிகள் குறித்த காணொளி தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் அந்த காணொளியை பார்த்தாகவும் ஆனால் அதை மட்டுமே வைத்து துல்லியமாக எந்த பகுதி என கணிக்க முடியாது எனவும் அது எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அந்த பக்கமா அல்லது இந்த பக்கமா என்பது தெரியும் வரை கருத்து சொல்வது சரியல்ல எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் சீன ராணுவம் இப்படி கட்டுமான பணிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான் இப்படி செய்வதன் மூலமாக எல்லையோரம் உள்ள களநிலவரத்தை அடியோடு மாற்ற முயற்சிப்பதாகவும்
அவர்கள் எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அந்த பக்கம் அதாவது அவர்களின் பக்கத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டால் கேள்வி கேட்க முடியாது, வேண்டுமானால் பதிலுக்கு நாமும் நமது பக்கத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் நிச்சயமாக நமது எல்லைக்குள் ஊடுருவி அவர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடாத வரைக்கும் நம்மால் அவர்களை கேள்வி கேட்கவோ அல்லது வேறு ஏதேனும் செய்யவோ முடியாது என கூறினார்.
ஆகவே அவர்கள் தற்போது களநிலவரத்தை மாற்ற முயற்சி செய்வதை உணர்ந்து நாம் ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக பதில் நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுற்தினார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.