சீனாவை மனதில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு தொலைதூர குண்டுவீச்சு விமானங்களை விற்கும் அமெரிக்கா ??

சமீபத்தில் ஆஸ்திரேலிய கொள்கை மையம் வெளியிட்ட செய்தி ஒன்றின்படி அமெரிக்க விமானப்படையின் செயலாளர் ஃபராங்க் கென்டால் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியா விரும்பினால் B-21 Raider தொலைதூர ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா விற்கும் என தெரிவித்துள்ளார்.

இதை ஃபராங்க் கெண்டால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணமாக சென்றிருந்த போது ஆஸ்திரேலிய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ராபர்ட் சிப்மேன் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த B-21 Raider தொலைதூர ஸ்டெல்த் குண்டுவீச்சு போர் விமானம் அடுத்த தலைமுறையை சேர்ந்ததாகும், மேலும் இது தற்போது அமெரிக்காவால் மிகவும் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஆஸ்திரேலிய விமானப்படை தளபதி பேசும் போது தொலைதூர தாக்குதல் திறன்கள் குறித்து அரசு தான் பாதுகாப்பு கொள்கையை சீராய்வு செய்யும் போது முடிவு செய்ய வேண்டும், ஆனால் இத்தகைய விமானங்களை வாங்கினால் அவற்றை சரியாக பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் முக்கியமானது என்றார்.