அமெரிக்க சபாநாயகர் தைவான் பயணம், தைவானுக்கு அருகே படைகளை நகர்த்தும் அமெரிக்க ராணுவம் !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on அமெரிக்க சபாநாயகர் தைவான் பயணம், தைவானுக்கு அருகே படைகளை நகர்த்தும் அமெரிக்க ராணுவம் !!

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோஸி முதலில் தைவான் செல்வது சந்தேகமாக இருந்து நிலையில் தற்போது நிச்சயமாக தைவான் செல்வார் என தைவானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர் சீன அரசு சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் சென்றால் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீன அரசும், சீன அதிபரும் மிகவும் கடுமையான எச்சரிக்கையுடன் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் நான்சி பெலோஸியின் விமானத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் வகையில் தைவானுக்கு அருகே தனது படைகளை நகர்த்தி வருகிறது.

முன்னர் அமெரிக்க ராணுவம் நான்சி பெலோஸி தைவான் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்த நிலையில் தற்போது அணுசக்தி விமானந்தாங்கி கப்பல் நாசகாரி கப்பல்கள் எரிபொருள் டேங்கர் விமானம் ஆகியவற்றை தைவானுக்கு அருகே நகர்த்தி வருகிறது.

இது தவிர ஏதேனும் ராணுவ ரீதியான மோதல் ஏற்பட்டால் தைவானில் இருந்து 721 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள அமெரிக்காவின் கடெனா படைதளத்தில் இருந்து போர் விமானங்களை அனுப்பி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.