பைராத்கர் ட்ரோன்களை அடுத்து அட்லய் டாங்கிகளை ஏற்றுமதி செய்ய முனையும் துருக்கி !!

  • Tamil Defense
  • May 23, 2022
  • Comments Off on பைராத்கர் ட்ரோன்களை அடுத்து அட்லய் டாங்கிகளை ஏற்றுமதி செய்ய முனையும் துருக்கி !!

துருக்கி தனது பைராத்கர் ஆளில்லா விமானங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது அவை அஸர்பெய்ஜான்- அர்மீனியா போரிலும், ரஷ்யா உக்ரைன் போரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இப்படி துருக்கியின் பைராத்கர் ஆளில்லா வானூர்திகள் உலகளாவிய ரீதியில் ஆயுத சந்தையில் பெருமதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன என்றால் மிகையாகாது.

இந்த நிலையில் துருக்கி அடுத்தபடியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அட்லய் டாங்கிகளை ஏற்றுமதி செய்யும் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அட்லய் டாங்கியின் பாகங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.

ஜெர்மனியிடம் இருந்து 55 காலிபர் திறன் கொண்ட Rh-120 துப்பாக்கி, Renk கியர்பாக்ஸ், MTU833 என்ஜின் மற்றும் தென்கொரியாவிடம் இருந்து K2 டாங்கியில் பயன்படுத்தப்படும் Turret எனப்படும் சூழலும் மேற்பகுதி ஆகியவற்றை பெற துருக்கி முயற்சி செய்தது.

ஆனால் இதில் ஜெர்மனி துருக்கி மீதான ஒரு ஆயுத வியாபார தடை காரணமாக MTU833 என்ஜின் மற்றும் Renk கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொடுக்கவில்லை இதனையடுத்து தற்போது தென்கொரியாயிடம் இருந்து என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் வாங்கி அட்லய் டாங்கிகளில் இணைத்து பயன்படுத்தி வருகிறது.

அட்லய் டாங்கி திட்டத்தில் T1 மற்றும் T2 எனும் இரண்டு ரகங்கள் உள்ளன, T1 ரகத்தில் 250 டாங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன, T2 என்பது அதிநவீன ரகமாகும் இதில் சுமார் 1000 டாங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன இவற்றிற்கு பிறகு ஒரு ஆளில்லா டாங்கிகயை தயாரிக்க துருக்கி திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் BATU எனப்படும் 1500 குதிரை திறன் கொண்ட டாங்கி என்ஜினை உள்நாட்டிலேயே துருக்கி தயாரித்து வருகிறது இதனை அட்லய் T2 ரக டாங்கிகளில் பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்லய் டாங்கிகள் சுமார் 65 டன்கள் எடை கொண்டவை நான்கு வீரர்கள் இயக்கும் வகையிலானது, ஒரு 12.7mm இயந்திர துப்பாக்கி, SARP தாக்குதல் அமைப்பு, AKKOR பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இந்த டாங்கியின் அம்சங்கள் ஆகும்.