காஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்த தீவிரம் காட்டும் பயங்கரவாத அமைப்புகள் !!

  • Tamil Defense
  • May 3, 2022
  • Comments Off on காஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்த தீவிரம் காட்டும் பயங்கரவாத அமைப்புகள் !!

சினார் கோர் தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பாண்டே காஷ்மீரத்து இளைஞர்களை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்த தீவிரமாக முயன்று வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் அமைதியாக இருந்து கொண்டு காஷ்மீரத்து இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி வருவதாகவும் இத்தகைய பயங்கரவாதிகளை HYBRID பயங்கரவாதிகள் என அழைப்பதாகவும் கூறினார்.

அதாவது முன்னர் அதிகளவில் உள்ளூர் பயங்கரவாதிகள் இருந்தனர் அவர்களில் பலர் மனமாற்றம் அடைந்தது அல்லது பாதுகாப்பு படைகளால் சுட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

மீதமிருக்கும் சொற்ப அளவிலான உள்ளூர் பயங்கரவாதிகளும் தற்போது பாதுகாப்பு படைகளிடம் சிக்கி வருகின்றனர் சமீபத்தில் கூட குல்காம் பகுதியை சேர்ந்த யூசூஃப் பாட் எனும் பயங்கரவாதி தரைப்படையின் 34ஆவது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் மற்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

குல்காம் பகுதியில் உள்ள கதிஹாமா கிராமத்தில் உள்ள அவனது வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள், 51 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் கைபற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இவனை தொடர்ந்து ஶ்ரீநகர் அருகேயுள்ள பட்காம் பகுதியில் உள்ள மூச்வா கிராமத்தை சேர்ந்த ஷேக் ஸாஹீத் குல்சார் எனும் Hybrid பயங்கரவாதி 50ஆவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் மற்றும் காவல்துறையால் கைது செய்யப்பட்டான்.

இந்த HYBRID பயங்கரவாதிகள் எல்லோரை போலவே சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு ஒரு பணி வழங்கப்படும் போது அதனை நிறைவேற்றி விட்டு மீண்டும் பழைய வாழ்க்கை நோக்கி திரும்பி விடுவார்கள் இவர்களை கண்டு பிடிப்பதும் அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.