விரைவில் பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் முப்படை துணை தளபதிகள் மற்றும் ஒரு மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) விஞ்ஞானி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேலதிகமாக சுமார் 100 K9 VAJRA ரக தானியங்கி பிரங்கிகளை வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில் அது தவிர வேறு பல்வேறு ஆயுத அமைப்புகளுக்கான ஒப்பந்தங்கள் பற்றியும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பினாகா பல்குழல் ராக்கெட் லாஞ்சர்களுக்கான ராக்கெட்டுகள் மற்றும் இந்திய தரைப்படைக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான ஆலோசனையும் அடங்கும்.
சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள 6400 பினாகா ராக்கெட்டுகளை Explosives Economy Limited எனும் தனியார் நிறுவனத்திற்கும் பொதுத்துறை நிறுவனமான ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்திற்கும் பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எந்த நிறுவனம் குறைவான விலையில் தயாரித்து தருமோ அந்த நிறுவனம் L1 ஆக தேர்வு செய்யப்பட்டு சுமார் 60% ஆர்டரும் மீதமுள்ள 40% ஒப்பந்தமும் இரண்டாவது இடத்தை பெறும் L2 நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பதும் Explosives Economy ltd நிறுவனம் ஏற்கனவே தரைப்படைக்கு கையேறி குண்டுகளை தயாரித்து வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதை போல வான் பாதுகாப்பு அமைப்புகளை பொறுத்தவரை கொஞ்சம் இறக்குமதி செய்யப்படும் மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் அந்த வகையில் 220 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன, கூடவே இவற்றிற்கான 1 லட்சத்து 40 ஆயிரம் ரவுண்டு குண்டுகளும் வாங்கப்பட உள்ளன என கூறப்படுகிறது.