
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூர் பகுதியில் இந்திய கடற்படையின் Westland Seaking கடல்சார் ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து NASM – SR எனும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இதன் விரிவாக்கம் Naval Anti Ship Missile – Short Range என்பதாகும் அதாவது கடற்படை குறுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாகும் இது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
100 கிலோ அளவிலான வெடிகுண்டை மாக்0.8 சப்சானிக் வேகத்தில் சுமந்து சென்று கடல்பரப்பை ஒட்டி சென்று மிகவும் துல்லியமாக இந்திய தயாரிப்பு வழிகாட்டி அமைப்பின் உதவியோடு இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
ஆனால் இது குறுந்தூர ஏவுகணை என்பதால் அளவில் சிறியதாக இருக்கும் ஆகவே மிகப்பெரிய கப்பல்களை முற்றிலும் அழிக்காது ஆனால் அவற்றை தாக்கி நகர முடியாமல் செயலிழக்க வைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இதனை கொண்டு நடுத்தர கப்பல்கள் மற்றும் சிறிய கலன்களை தாக்கி முழ்கடிக்க முடியும் என்பதும் கடற்கரை பகுதிகளில் இருந்தும் இவற்றை ஏவி அருகில் வரும் எதிரி கலன்களை தாக்க முடியும்.
55 கிலோமீட்டர் இயக்க வரம்பு கொண்ட இந்த ஏவுகணையை இந்தியா வாங்கவுள்ள அமெரிக்க தயாரிப்பு MH60 Romeo கடல்சார் ஹெலிகாப்டர்கள், கடற்படை மிக்-29 மற்றும் இனி வாங்கவுள்ள போர் விமானங்களிலும் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
இந்த சோதனையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஏவுகணையை ஏவிய லாஞ்சர் அமைப்பானது (ஏவும் கருவி) அதுவும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என இந்திய கடற்படை மற்றும் DRDO வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.