கடலடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா வானூர்தி தயாரிக்க அறிவிக்கை வெளியிட்ட இந்தியா !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடலடியில் அதாவது நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்பட கூடிய ஆளில்லா வானூர்திகளை தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்களை கண்டறிய EOI – Expression of Interest எனும் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டமானது பாதுகாப்பு அமைச்சகத்தின் TDF – Technology Development Fund அதாவது தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாகும் அதாவது நவீன தொழில்நுட்பங்களை தயாரிக்க திறனுள்ள ஆனால் நிதி ஆதாரம் இல்லாத நிறுவனங்களுக்கு நிதி அளித்து ஊக்குவிக்கும் திட்டமாகும்.

ULUAV என அழைக்கப்படும் இந்த வகை ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களை கொண்டிருக்கும் எனவும் இவற்றின் மூலமாக நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு வெளியே வராமலேயே கடலின் மேற்பரப்பை நன்றாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ULUAVக்களில் ஆயுதம் தாங்கிய வடிவம் தயாரிக்கப்படுமா என்பது பற்றிய தகவல் ஏதும் தற்போதைக்கு வெளியாகவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.