ரஷ்யா உடனான Ka-31 ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா !!

  • Tamil Defense
  • May 22, 2022
  • Comments Off on ரஷ்யா உடனான Ka-31 ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா !!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் 520 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 10 Kamov – 31 (காமோவ்-31) ரக கடல்சார் AEWCS ஹெலிகாப்டர்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையின் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் தயாரிப்பு மற்றும் பண பரிவர்த்தனை விஷயங்கள் கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளதால் இதற்கான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் காரணங்களை வெளியிடவில்லை அதே நேரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இரண்டுமே இவற்றிற்கு பதிலாக வேறு ஹெலிகாப்டர்களை தேர்வு செய்ய உள்ளனவா என்பது பற்றிய தகவலும் இல்லை.

தற்போது இந்திய கடற்படை முறையே 2003,2005,2013 ஆகிய மூன்றாண்டுகளில் 4,5,5 என்ற எண்ணிக்கையில் வாங்கிய 14 Ka-31 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது.

மேலும் ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் ஆகஸ்ட் மாதம் படையில் இணைய உள்ள நிலையில் அதில் பயன்படுத்த AEWCS ஹெலிகாப்டர்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவாகும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.