சுதேசி இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களின் சப்ளையை துவங்க உள்ள HAL !!

  • Tamil Defense
  • May 24, 2022
  • Comments Off on சுதேசி இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களின் சப்ளையை துவங்க உள்ள HAL !!

நமது நாட்டின் பொதுத்துறை வானூர்தி தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் HAL – HINDUSTAN AERONAUTICS LIMITED நிறுவனம் LUH – Light Utility Helicopter எனப்படும் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களின் சப்ளையை துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முதலாவது ஹெலிகாப்டரும், 2023 மார்ச் வாக்கில் மூன்று ஹெலிகாப்டர்களும் டெலிவரி செய்யப்பட உள்ளன இவற்றை தவிர 2023-24 வாக்கில் எட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் இந்திய தரைப்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் முதல் தொகுதியில் இருந்து தலா இரண்டு ஹெலிகாப்டர்களும் பின்னர் இரண்டாவது தொகுதியில் இருந்து தலா நான்கு ஹெலிகாப்டர்களும் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹெலிகாப்டரை லடாக்கின் லேயில் அதிக குளிரில் சோதனை செய்த போது 24 மணி நேரம் திறந்த வெளியில் நிறுத்தி சோதனை செய்யப்படவிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் 48 மணி நேரம் திறந்த வெளியில் அதிக குளிரில் நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.

ஆயினும் LUH ஹெலிகாப்டரின் என்ஜினை இயக்க முடிந்து பின்னர் வெற்றிகரமாக வானில் பறந்தது இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் லடாக் போன்ற அதிக உயர பகுதியில் சுமார் 75கிலோ எடையுடன் வெற்றிகரமாக பறந்துள்ளது.

இதன் மூலம் இத்தகைய இலகுரக ஹெலிகாப்டர்களில் அதிக உயரத்தில் 75 கிலோ எடையுடன் வெற்றிகரமாக இயங்கிய அல்லது பறந்த முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் பெற்றுள்ளது சிறப்பாகும்.