பஞ்சாப் காவல்துறை உளவுப்பிரிவு தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதல் காலிஸ்தான் பயங்கரவாதம் !!
பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில காவல்துறையின் உளவுப்பிரிவு தலைமையகம் மீது ராக்கெட் கிரனேடு RPG மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் களமிறங்கி விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான RAW , உள்நாட்ட உளவு அமைப்பான IB, ராணுவ உளவு அமைப்பான MI மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் உளவு பிரிவு BSF – IW ஆகிய அமைப்புகள் அனைத்தும் தங்களது நடவடிக்கைகளை பன்மடங்கு தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த தாக்குதல் பற்றி அதிகாரிகள் கூறும்போது நீண்ட காலமாக கையெறி குண்டு தாக்குதல்கள் சின்ன சின்ன துப்பாக்கி சூடு போன்றவை நடைபெற்று வந்தன இவற்றால் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படவில்லை
ஆனால் தற்போது மாநில காவல்துறையின் உளவு பிரிவின் தலைமையகத்தின் மீதே RPG போன்ற பயங்கர ஆயுதத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வழக்கத்திற்கு மாறானது நிச்சயமாக கவலைப்பட வேண்டிய விஷயம் தான் என்றார்.
இந்த தாக்குதல் பற்றிய தகவலை பஞ்சாப் காவல்துறை தனது அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல் வாய்வழி உத்தரவு மூலமாக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதும் தாக்குதலில் மிகப்பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.