ரஷ்ய சுற்றுபயணிகள் தங்களது நாட்டிற்கு எவ்வித தடங்கலும் இன்றி வந்து செல்வதற்கென ஒரு பிரத்யேக விமான போக்குவரத்து நிறுவனத்தை துருக்கி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்ய சுற்றுபயணிகள் அதிகமாக வந்து செல்லும் நாடுகளில் துருக்கி மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது தற்போது உக்ரைன் போரால் ரஷ்ய பயணிகளின் வரவு குறைந்து துருக்கியின் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்து உள்ளது.
இதை தொடர்ந்து துருக்கி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை இந்த பின்னடைவை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) மற்றும் பெகாசஸ் ஏர்லைன்ஸ் (Pegasus Airlines) ஆகியவை இணைந்து சுமார் 2 மில்லியன் இருக்கைகளை ரஷ்ய பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளன.
மேலும் துருக்கியின் அன்டால்யா நகரை தளமாக கொண்டு ரஷ்யாவை மையப்படுத்தி இயங்கும் ஒரு புதிய விமான நிறுவனத்தை துவங்கவும் அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர், இதன்மூலம் மற்றொரு 1 மில்லியன் இருக்கைகள் ரஷ்ய பயணிகளுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.